கேரளாவின் புகழ்பெற்ற ‘கொச்சி வாட்டர் மெட்ரோ’ படகுப் பயணத்தின் போது, பயணிகள் சிலர் குஜராத்தின் பாரம்பரிய ‘கர்பா’ நடனத்தை ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போர்ட் கொச்சிக்கு செல்லும் வழியில், நகர்ந்து கொண்டிருக்கும் படகின் நடுவே ஒரு குழுவினர் உற்சாகமாகப் பாடி, கர்பா நடன அசைவுகளைச் செய்யும் இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே வைரலானது.

“>

இதனால் “இது ஒரு அழகான தன்னிச்சையான கொண்டாட்டமா அல்லது பொதுப் போக்குவரத்தின் விதிகளை மீறும் செயலா?” என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட இந்த தற்காலிக நடன நிகழ்ச்சி, தற்போது இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த வீடியோவைக் கண்ட பலரும் பொது இடங்களில் மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் மற்றும் ஒழுக்கம் குறித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். “பொதுப் போக்குவரத்து என்பது அனைவரும் பகிர்ந்து பயன்படுத்தும் ஒரு இடம், அது தனிநபர் கொண்டாட்டங்களுக்கான மேடை அல்ல; மற்ற பயணிகளின் அமைதியைக் கெடுக்கும் வகையில் இப்படி நடந்துகொள்வது தவறு” என்று ஒரு தரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கலாச்சாரக் கொண்டாட்டங்களை ரசிக்கலாம் என்றாலும், அதற்கென தனியாகப் படகுகளை வாடகைக்கு எடுத்து ஆடலாமே தவிர, பொதுச் சொத்தை தங்களின் சொந்தப் பயன்பாட்டு இடமாக மாற்றக் கூடாது என்றும் அவர்கள் வதிவுறுத்துகின்றனர்.

இருப்பினும், மற்றொரு தரப்பினர் “இது யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வரை, பயணத்தின் போது தன்னிச்சையாக உருவான ஒரு மகிழ்ச்சியான தருணம் மட்டுமே, இதில் தவறு ஒன்றும் இல்லை” என ஆதரித்துப் பேசி வருகின்றனர். பொதுப் போக்குவரத்துத் தளங்களில் தனிமனித சுதந்திரத்திற்கும் மற்றவர்களின் வசதிக்கும் இடையிலான எல்லையை எங்கே வகுப்பது என்ற விவாதத்தை இந்தச் சம்பவம் மீண்டும் தூண்டியுள்ளது.