குருகிராமின் ராஜீவ் சவுக்கில், டாக்ஸிக்காக காத்திருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக, மாடலும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநருமான சோனி சிங் புகார் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை, ஜெய்ப்பூரில் இருந்து திரும்பிய அவர், டாக்ஸி வர காத்திருந்தபோது, ஒரு ஆண் தொடர்ந்து தன்னை நோக்கி பார்த்ததை கவனித்தார். சில நேரத்தில், அந்த நபர் பேன்ட்டின் ஜிப்பை அவிழ்த்து, தன்னை நோக்கி சுயஇன்பம் செய்யத் தொடங்கியதாக அவர் கூறினார். அதிர்ச்சியடைந்த சோனி சிங், சம்பவத்தை தனது மொபைலில் பதிவு செய்தார்.

உடனடியாக போலீசாருக்கும், பெண்கள் உதவி எண்ணிற்கும் அழைத்தும் பதில் கிடைக்காததால், அவர் மற்றொரு டாக்ஸி முன்பதிவு செய்து வீட்டிற்கு சென்றார். பின்னர், அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, “பகலில் கூட பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக இல்லாதது வருத்தம் தருகிறது. இப்படிப் பட்ட வக்கிர செயல்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும்” என்று பதிவிட்டார். குற்றவாளியை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கேட்டார்.

இந்த பதிவு வைரலான இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 6ஆம் தேதி, குருகிராம் போலீசார் FIR பதிவு செய்தனர். குற்றவாளியை பிடிக்க சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்றும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தனர். அழகு, தோல் பராமரிப்பு, ஃபேஷன் துறைகளில் உள்ளடக்கம் உருவாக்கும் சோனி சிங்கிற்கு, இன்ஸ்டாகிராமில் சுமார் 40 ஆயிரம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.