ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற மால் ரோட் பகுதியில், சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்த நபர் ஒருவர், அவ்வழியாகச் சென்ற பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவி உடை அணிந்து வெறும் கால்களுடன் அந்தப் பாதையில் நடந்து சென்ற அந்த நபர், கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த வீடியோவில், அங்கிருந்த பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அந்த நபரின் செயலால் மிரண்டு போயிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, சிம்லா போலீஸ் எஸ்.பி கௌரவ் சிங் தலைமையிலான தனிப்படை தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கியது. சிம்லாவை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற அந்த நபரைத் தடுத்து நிறுத்திய போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாராயண் தாஸ் என்பது தெரியவந்தது.

கடந்த 2025-ம் ஆண்டே சிம்லாவிற்கு வந்துள்ள இவர், தற்போது மீண்டும் வந்து இது போன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளார். போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் தலைமை அலுவலகம் மிக அருகிலேயே இருக்கும் ஒரு பகுதியில் இப்படி ஒரு துணிகர சம்பவம் நடந்தது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த போலி சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.