கல்லூரி மாணவிகளுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகாரில், கர்நாடகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சவாத். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண்களுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடைய மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக குடகு மேம்பாட்டுக் குழுத் தலைவர் பிரசன்னா பட், மடிகேரி புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கல்லூரி மாணவர் முகமது சவாத்தைக் கைது செய்தனர். அவரிடமிருந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்துள்ள போலீஸார், இந்த வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார்? இதன் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா? என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
