தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி அம்மன் நகர் பகுதியில் மதுபோதை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக அரங்கேறியுள்ள ஒரு கோரச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் என்பவரது மனைவி கடந்த ஆறு ஆண்டுகளாக அவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களது 19 வயது மகளான சின்மயி தனது பாட்டியான உமாராணியுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது தந்தைக்குச் சாப்பாடு வழங்குவதற்காகச் சின்மயி அங்குச் சென்றபோது, பிரிந்துவாழும் தாய் குறித்துத் தந்தையிடம் நியாயம் கேட்டுள்ளார்.

தந்தை என்ற ஈவு இரக்கமின்றி அதிக மதுபோதையில் இருந்த சுரேஷ், தன் மகள் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கொடுவாளால் சின்மயியின் தலை மற்றும் முகத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு பதறிடித்து ஓடிவந்து தனது பேத்தியைக் காப்பாற்ற முயன்ற அவரது தாயாரும், அதாவது சின்மயியின் பாட்டியுமான உமாராணியையும் அந்த நபர்  விடாமல் சரமாரியாக வெட்டித் தள்ளியுள்ளார். கழுத்து மற்றும் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான பாட்டி உமாராணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதேவேளையில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மாணவி சின்மயியை மீட்டு அருகிலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையில், தகவலறிந்து விரைந்து வந்த ஏ.பள்ளிப்பட்டி காவல்துறையினர் உமாராணியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொடூரச் செயலில் ஈடுபட்ட சுரேஷை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது மாணவி சின்மயியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததால், இச்சம்பவம் தற்போது அதிகாரப்பூர்வமாக இரட்டைக் கொலை வழக்காக மாற்றப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.