கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடியிருப்புப் பகுதிகளில் உலாவந்து பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அதனை அணிந்து மகிழ்ந்த வினோத ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு பகுதியில் அமல் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக, அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் முன்பு துவைத்துக் காயப் போடப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்துத் திருடி வந்துள்ளார்.

திருடிய உள்ளாடைகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அவற்றை அவரே அணிந்து அழகு பார்த்துள்ளார். மேலும், அந்த ஆடைகளை அணிந்தபடி செல்பி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுத்துத் தனது அலைபேசியில் சேமித்து வைத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகார்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, போலீசார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அமலைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தான் உள்ளாடைகளைத் திருடியதையும், அதனை அணிந்து வீடியோ எடுத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்குச் சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் மறைவான இடங்களில் திருடி ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான பெண்களின் உள்ளாடைகளைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவற்றை மீட்ட போலீசார், அமலைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த நபரிடம், இது போன்று வேறு ஏதேனும் விபரீத செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.