சோலாப்பூரில் ஓலா மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது ஸ்கூட்டரில் பயணித்த ஒரு சிறுவனும் அவனது தந்தையும் நூலிழையில் உயிர் தப்பினர். வாகனம் திடீரென புகையத் தொடங்கியதைக் கண்ட தந்தை, நிலைமையை உணர்ந்து உடனடியாக தனது குழந்தையுடன் கீழே குதித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் கீழே இறங்கிய சில விநாடிகளிலேயே ஸ்கூட்டர் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
📍Pune | Ola electric bike catches fire outside Solapur school, parent and toddler escape safely. pic.twitter.com/OVV4ZWKJ18
— The Tatva (@thetatvaindia) January 21, 2026
“>
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் நடந்த இந்தத் தீ விபத்து, ஓலா ஸ்கூட்டர்களின் பேட்டரி தரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சமீபகாலமாக பல்வேறு மின்சார வாகனங்கள் இதுபோன்று தீப்பற்றி எரிவது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்தச் சம்பவம் வாகன உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது பேட்டரி சூடாவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், நிறுவனம் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
