திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே உள்ள சக்தி நகர் பகுதியில், ஒரு வயது குழந்தை வண்டை விழுங்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குகஸ்ரீ எனும் அந்த குழந்தை, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக தரையில் இருந்த வண்டையை எடுத்து விழுங்கியதாக கூறப்படுகிறது. அந்த வண்டு குழந்தையின் மூச்சுக்குழாயை கடித்ததால், குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.

உடனே பெற்றோர் அதனை கவனித்து பதற்றத்தில் குழந்தையை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தும், அதற்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனையடுத்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் மரணம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.