இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதால், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையும் குழப்பமும் நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணம், மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். “சிறிது நேரம் காத்திருந்தோம், ஆனால் நிலைமை மோசமடைந்ததால் ஆம்புலன்ஸ் அழைத்தோம்,” என்று ஸ்மிருதியின் மேலாளர் கூறினார்.
தந்தையுடன் அதிக நெருக்கம் கொண்ட ஸ்மிருதி, அவர் குணமடையும் வரை திருமணத்தை காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார். மருத்துவர்களும் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து தங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சலும் உடல்நலக்குறைவு காரணமாக சாங்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் திங்கட்கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருமணத்தைக் குறித்த அனைத்து ஊகங்கள் மத்தியில், ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதள சுயவிவரத்தில் இருந்த திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் தொடர்பான அனைத்து பதிவுகளையும், திருமண முன்மொழிவு வீடியோவைப்போல ரீல்களையும் நீக்கிவிட்டார்.
அவரது நெருங்கிய தோழிகள் மற்றும் இந்திய பெண்கள் அணியின் வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரும் அறிவிப்பு வீடியோக்களை தங்களின் பக்கங்களிலிருந்து அகற்றியுள்ளனர். இதனால் திருமண விழா மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக இந்தியாவுக்கு வென்றுதந்த அணியில் முக்கிய பங்கு வகித்த மந்தனா, 9 போட்டிகளில் 434 ரன்கள் எடுத்து தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக இருந்தார்.
மேலும் தற்போது அவரது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திருமண விழாக்கள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
