கர்நாடக மாநிலம் தாவணகெரேவைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2007-ல் திருமணமாகி 17 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், பிரியங்காவிற்கு அவரது கல்லூரித் தோழன் மோகனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கோரிய பிரியங்கா, தனது 5 வயது இளைய மகள் வெண்ணிலாவுடன் பெங்களூருவில் கள்ளக்காதலன் மோகனுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.

கடந்த மார்ச் 24 அன்று சிறுமி வெண்ணிலா திடீரென உயிரிழந்த நிலையில், அதுகுறித்து கேட்டதற்கு பிரியங்கா முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். ஒருமுறை பிரியாணி கொடுத்ததாகவும், மறுமுறை ஐஸ்கிரீம் கொடுத்து ஏசி காரில் தூங்க வைத்ததாகவும் கூறியது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மகள் வெண்ணிலாவின் மரணத்தில் சந்தேகம் அடைந்த தந்தை பிரவீன், பிரேதப் பரிசோதனை அறிக்கையை வெளிநாட்டில் உள்ள தனது மருத்துவர் உறவினருக்கு அனுப்பி ஆலோசித்துள்ளார். அந்த அறிக்கையில், சிறுமி கடுமையாகத் தாக்கப்பட்டு, மூச்சுத் திணறடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமானது. மகள் இறந்து 3 மாதங்களுக்குப் பிறகு, பிரேதப் பரிசோதனை ஆதாரத்துடன் தந்தை பிரவீன் ககாவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார், கள்ளக்காதலன் மோகனைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கொடூரத் தாய் பிரியங்காவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.