வாஷிங்டனில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதுடன், அங்குள்ள மதச் சின்னங்களை அவமதித்து வருவது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லெபனானில் முகாமிட்டுள்ள இஸ்ரேலிய தரைப்படை வீரர்கள், பொதுமக்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவதுடன் மத வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர். அண்மையில் தபெல் நகரில் இயேசு கிறிஸ்து சிலையை இஸ்ரேலிய வீரர் ஒருவர் அடித்து உடைக்கும் வீடியோ வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது அதே நகரில் கன்னி மரியாள் சிலையின் வாயில் சிகரெட்டை வைத்து ஒரு இஸ்ரேலிய வீரர் அவமதிக்கும் புகைப்படம் வெளியாகி சர்வதேச அளவில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய செயல்களைத் தற்பெருமைக்காக இஸ்ரேலிய வீரர்களே வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வீரர் அடையாளம் காணப்பட்டால் அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை ‘டைம்ஸ் ஆப் இஸ்ரேல்’ பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது. மற்றொரு புறம், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மேலும் 6 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு கருதி 12 கிராமங்களில் உள்ள மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், லெபனானை விட்டுத் தனது தரைப்படை வெளியேறாது என்பதில் இஸ்ரேல் பிடிவாதமாக இருப்பது, அப்பகுதியில் அமைதி திரும்புவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.