தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் நிலவுகிறது.

இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் குறித்து அனைத்து மாவட்ட ‌ ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு தமிழக அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. பாலாபிஷேகம் மற்றும் கட்டவுட், பேனர் போன்றவைகளுக்கும் அனுமதி கிடையாது. மேலும் கூடுதல் விலைக்கு டிக்கெட் கட்டணம் வசூலிப்பது மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.