தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் இணையதளங்களில் வெளியிடக்கூடாது என இரு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் முன்னிலையில் வந்த நிலையில், 2 படங்களும் பெரிய பொருள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் இணையதளங்களில் படங்களை வெளியிட்டால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்பதால் இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதோடு வாரிசு திரைப்படத்தை சட்டவிரோதமான முறையில் 4,548 இணையதள பக்கங்களிலும், துணிவு திரைப்படத்தை 2,754 இணையதள பக்கங்களிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர். மேலும் இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர்.