சீனா நாட்டில் நிலவி வரும் கடுமையான வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக, தங்களுக்கு எவ்விதச் சம்பளமும் கிடைக்கவில்லை என்றாலும் கூட அலுவலகச் சூழலைப் பெறுவதற்காகச் சொந்தப் பணத்தைக் கொடுத்து வாடகை அலுவலகங்களுக்குச் செல்லும் விநோதமான வழியை இளைஞர்கள் பின்பற்றி வருகின்றனர்.

‘பிரெடென்ட் டூ வர்க்’ எனப்படும் இந்த அதிநவீன ட்ரெண்டின் மூலம், ஜென்-இசட் தலைமுறைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள் லேப்டாப்களுடன் வந்து புதிய வேலைகளுக்கு விண்ணப்பிப்பது, தங்களது சுயதொழில் திட்டங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு வாடகை அலுவலகங்களில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்வதற்காக இந்த இளைஞர்கள் தினமும் தங்களது சொந்தப் பணத்திலிருந்து சுமார் 30 முதல் 50 யுவான் வரை (தோராயமாக 400 முதல் 670 ரூபாய்க்கு மேல்) செலவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக நீண்ட கால அடிப்படையில் இவர்களது வருடாந்திரச் செலவு பெரும் தொகையை எட்டும் நிலை உருவானாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கித் தனிமையால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் இந்த அலுவலகச் சூழல் தங்களுக்கு முறையான உத்வேகத்தைத் தருவதாக அவர்கள் நம்புகின்றனர்.

நான்கிங், ஷாங்காய், வுஹான் மற்றும் செஞ்சென் போன்ற சீனாவின் முக்கிய நகரங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த விசித்திரமான நிலைமை, அங்குள்ள இளைய சமுதாயத்தினரிடையே நிலவும் கடுமையான வேலைவாய்ப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களைத் தாண்டி, பல பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் அங்குள்ள இளைஞர்களின் எதிர்காலம் குறித்த சவால்களைத் தொடர்ந்து எச்சரித்து வருவதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.