மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் ரேஞ்ச் போலீஸ் ஐஜியாக பணியாற்றிய அரவிந்த் சக்சேனா ஓய்வு பெற்றதை முன்னிட்டு, அவருக்கு சக போலீசார் வித்தியாசமான முறையில் பிரியாவிடை அளித்தனர். வழக்கமான நிகழ்ச்சிகளைத் தாண்டி நடைபெற்ற இந்த நிகழ்வில், கான்ஸ்டபிள் சுனில் ‘பாகுபலி’ தனது பற்களால் ஐஜி சென்ற காரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஐஜி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அரவிந்த் சக்சேனா காரில் அலுவலகத்தை விட்டு புறப்படத் தயாரானபோது, காரில் கயிறு கட்டிய சுனில் பாகுபலி, தனது பற்களின் வலிமையை பயன்படுத்தி காரை மெதுவாக இழுத்துச் சென்றார். காருக்குள் அதிகாரிகள் அமர்ந்திருந்த நிலையிலும், அவர் எந்த சிரமமும் இன்றி காரை முன்னோக்கி நகர்த்தியதை பார்த்த அனைவரும் கைதட்டி பாராட்டினர்.

 

சுனில் ‘பாகுபலி’ தனது அசாதாரண உடல் வலிமைக்காக காவல்துறையில் ஏற்கனவே அறியப்பட்டவர். இதற்கு முன்பு ஒரே நேரத்தில் ஏழு கார்களை பற்களால் இழுத்து சாதனை படைத்ததாகவும், பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் இதுபோன்ற வலிமை சாகசங்களை நிகழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவருக்கு ‘பாகுபலி’ என்ற பெயர் பரவலாக அறியப்படுகிறது.

பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய ஓய்வு பெற்ற ஐஜி அரவிந்த் சக்சேனா, தனது பணிக்காலத்தில் கிடைத்த சக அதிகாரிகள் மற்றும் காவலர்களின் அன்பும் ஒத்துழைப்பும் என்றும் மறக்க முடியாதவை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதனிடையே, போலீஸ் துறையில் அரிதாகக் காணப்படும் இந்த வித்தியாசமான பிரியாவிடை நிகழ்வு இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகிறது.