பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்..

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலை உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த பணிப்பெண் கதவை தட்டியும் வாணி ஜெயராம் திறக்காததால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. போலீசார் வந்து பார்த்தபோது வீட்டினுள் வாணி ஜெயராம் தலையில் அடிபட்டு ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதையடுத்து இயற்கைக்கு மாறான மரணம் என சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று உடற்கூறு ஆய்வுக்கு பின் வாணி ஜெயராம் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநர் ரவி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையே வாணி ஜெயராம் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், திறமையான வாணி ஜெய்ராம் ஜி அவர்களின் மெல்லிசை குரல் மற்றும் பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய மற்றும் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் செழுமையான படைப்புகளுக்காக நினைவு கூரப்படுவார். அவரது மறைவு படைப்புலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று பதிவிட்டுள்ளார். குடியரசு தினத்தை ஒட்டி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..