குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் எனப்படும் சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டுமருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில் ஒருவர் இறந்தார். அதோடு பலருக்கு பார்வை பறி போனதால், EzriCare செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத பாட்டில்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) பரிசோதனை செய்து வருகிறது.

மேலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் EzriCare (அ) Delsam Pharma’s Artificial Tears ஆகிய மருந்துகளை வாங்க வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அத்துடன் அசுத்தமான செயற்கை கண்ணீரைப் பயன்படுத்துவது கண் நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தும் என்றும் இதனால் நிரந்தரமான கண் பார்வை இழக்க நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிறுவனம் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில், குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் தமிழ்நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மற்றும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் ரெய்டு நடத்தி உள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரிகள் தவிர்த்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தொகுதிகளில் இருந்து மாதிரிகளை நாங்கள் சேகரித்து உள்ளோம். அமெரிக்காவில் இருந்து திறக்கப்படாத மாதிரிகளுக்காக தாங்கள் காத்திருக்கிறோம். அரசிடம் முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்திருக்கிறோம் என கூறியுள்ளார்.