கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கங்கேஸ்வரன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்கேஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் நில புரோக்கரான லட்சுமணன் என்பவரிடம் 250 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அந்த ரூபாயை லட்சுமணன் பலமுறை கேட்டும் கங்கேஸ்வரன் திரும்ப கொடுக்கவில்லை. நேற்று காலை சவுரிப்பாளையம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்த கங்கேஸ்வரனிடம் லட்சுமணன் 250 ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை என கங்கேஸ்வரன் கூறியுள்ளார். கடனை கொடுக்காமல் மது குடிக்க மட்டும் எப்படி பணம் வந்தது? என கேட்டு லட்சுமணன் தகராறு செய்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோபத்தில் லட்சுமணன் கங்கேஷ்வரனின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். அந்த சமயம் போதையில் இருந்த கங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கங்கேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.