வருகிற 7-ம் தேதி இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்கள் அவற்றை மாற்றிக் கொள்வதற்கும், காத்திருப்பில் இருப்பவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய மருத்துவ துறை கூறியுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவத்துறை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.
இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பி.என்.ஒய்.எஸ் இடங்கள் உள்ளது. 17 தனியார் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2022 – 2023 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் சமர்ப்பித்துள்ளனர். அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான 1,766 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வு முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தது.
கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலர் கல்லூரிகளில் சேராத காரணத்தினால் தற்போது யோகா மருத்துவ படிப்புகளில் மாநிலம் முழுவதும் நாடு 21 இடங்கள் காலியாக உள்ளது. அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவத்துறை வளாகத்தில் அவற்றுக்கான சிறப்பு கலந்தாய்வு வருகிற 7-ம் தேதி நடைபெற உள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில் இடங்கள் பெற்றவர்களும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும் இதில் பங்கேற்கலாம் எனவும் தற்போது உள்ள காலியிடங்களில் தகுதியின் அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://tnhealth.tn.gov.in இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.