நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் காப்பு கட்டிய மறுநாள் முதல் கோவில் மாடு, கோமாளி வேடம் அணிந்து ஒருவர் உறுமி மேளம் வாசித்து ஊர் ஊராக சென்று வீட்டுக்குள் மாடுகளை விட்டு நன்கொடை வசூல் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து பெரியவர்கள் முன்னிலையில் ஊனாங்கல்  பட்டி, வீரகாரன் கோவில் வளாகத்தில் மஞ்சள் தூள், கரும்பு, வெற்றிலை பாக்கு, ஆவாரம்பூ கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர்.

இந்நிலையில் மாடுகளை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து விரட்டுகின்றனர். அந்த மாடுகள் ஓடி வந்து எல்லைக்கோட்டை தாண்டுவதை பூ தாண்டும் விழாவாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மோகனூர் ஒன்றியம் ஊனாக்கால்பட்டி, சின்ன பெத்தாம்பட்டி, குன்னத்தூர், என்.புதுப்பட்டி ஊராட்சி, மல்லுமாச்சம்பட்டி மற்றும் மேலப்பட்டி போன்ற பகுதியை சேர்ந்த ஐந்து கோவில் மாடுகள் பங்கேற்றது. இதில் மூன்று முறை மாடு பூதாண்டும் போட்டி நடைபெற்றது. முடிவில் மல்லுமாச்சம்பட்டியை சேர்ந்த கோவில் மாடு வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த ஊர் கோமாளி வேடம் அணிந்திருந்தவரை குதிரை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.