சென்னை மதுரவாயில் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவிற்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் பற்றி திமுகவினர் ஒருமையில் பேசியது கண்டனத்திற்குரியது. கோபத்தை விட்டுவிட்டு முதலமைச்சர் பண்போடு நடந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
இது பற்றி பேசுவதற்காக தான் ஆளுநர் டெல்லி சென்றுள்ளார். ஆனால் திமுக கொடுத்த புகாரின் பேரில்தான் ஆளுநர் டெல்லிக்கு விசாரணைக்காக சென்றுள்ளதாக திமுகவினர் பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் பத்திரிகையாளர்களின் மைக்கை கண்டாலே சிலர் டென்ஷன் ஆகிறார்கள். கோபப்படுகிறார்கள். நிருபர்களை திட்டுகிறார்கள். அப்படியும் ஒரு குரூப் இருக்கத்தான் செய்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக தாக்கி பேசினார்.