அதிமுக கட்சியில் பல மாதங்களாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழு வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவில் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் தரப்புக்கா அல்லது இபிஎஸ் தரப்புக்கா என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

ஏனெனில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புகள் தங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் என்று கூறிவரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் யாருக்கு சின்னம் ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை பிரச்சனை வேண்டாம் என இரு தரப்பில் யாராவது ஒருவர் விலகி விட்டால் அதை பொறுத்துதான் தேர்தல் ஆணையத்தின் முடிவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மற்ற கட்சிகளை பொறுத்தவரையில் இடைத்தேர்தலாக இருந்தாலும் அதிமுகவை பொருத்தவரை தேர்தல் ஆணையம் நடத்தும் பலப்பரீட்சை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையில் ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் யாரை வேட்பாளராக நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஜனவரி 23-ஆம் தேதி மாவட்ட செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார்.

இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு தான் ஓபிஎஸ் தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது தெரியவரும். இதேபோன்று இபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் கே.வி ராமலிங்கத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சனை இருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியை தங்களுக்கே மீண்டும் ஒதுக்க வேண்டும் என கேட்டு வருகிறது. இதேபோன்று பாஜகவும் தாமரைக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.