முன்னாள் மத்திய அமைச்சரும், நாட்டின் தலைசிறந்த சோசலிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமான நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்..

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான சரத் யாதவ் வியாழக்கிழமை (நேற்று) காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு செய்தியை அவரது மகள் சுபாஷினி யாதவ் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். என் தந்தை இப்போது இல்லை என முகநூலில் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதி குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.

ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாதவ் மயக்கமடைந்து, பதிலளிக்க முடியாத நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கூறியது. மேலும் “பரிசோதனையில், அவருக்கு நாடித்துடிப்பு அல்லது பதிவுசெய்யக்கூடிய இரத்த அழுத்தம் எதுவும் இல்லை. ACLS நெறிமுறைகளின்படி அவர் CPRக்கு உட்படுத்தப்பட்டார். சிறந்த முயற்சிகள் இருந்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை, இரவு 10.19 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று அறிக்கை கூறியது.

லோக்சபாவிற்கு 7 முறையும், ராஜ்யசபாவிற்கு 7 முறையும் ஐக்கிய தனதா தளம் JD(U) வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு ஜேடி (யு) உருவானதில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை அதன் முதல் தேசியத் தலைவராக இருந்தார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர் ராஜ்யசபா தகுதி நீக்கம் செய்யப்பட்டு, கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

2018 இல், அவர் தனது சொந்தக் கட்சியான லோக்தந்திரிக் ஜனதா தளத்தைத் தொடங்கினார். ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதை லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைத்தார், இது “ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிக்கான முதல் படி” என்று கூறினார்.இவருக்கு மனைவி, மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ரீ சரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., அமைச்சர் என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் – “முன்னாள் மத்திய அமைச்சராகவும், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல தசாப்தங்களாக நாட்டிற்கு சேவை செய்த அவர், சமத்துவ அரசியலை வலுப்படுத்தினார்” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.

” பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில், ஆர்ஜேடி மூத்த தலைவரும், மாபெரும் சோசலிஸ்ட் தலைவரும், என் பாதுகாவலருமான ஷரத் யாதவ் ஜியின் அகால மறைவு செய்தியால் நான் வருத்தமடைந்தேன். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. அம்மா மற்றும் சகோதரர் சாந்தனுவுடன் உரையாடினேன். இந்த மணி நேரத்தில் துக்கத்தில், முழு சமாஜ்வாடி குடும்பமும் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி ட்விட்டர் பக்கத்தில், சரத் யாதவ் எனது அரசியல் பாதுகாவலர். என்னை துணை முதல்வராக்கியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவரது பங்களிப்பை பீகார் ஒருபோதும் மறக்காது” என்று தெரிவித்துள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ட்விட்டரில், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. சரத் ​​யாதவ் ஜியுடன் எனக்கு மிக ஆழமான உறவு இருந்தது. அவரது மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு வலுவான சோசலிச தலைவராக இருந்தார். அவரது மறைவு சமூக மற்றும் அரசியல் துறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்..