சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். சம்பவ நாளில் இவருடைய வீட்டின் அருகே உள்ள சாலையில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்துள்ளார். இவரை கிருஷ்ணமூர்த்தி தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கிருஷ்ணமூர்த்தியை கீழே தள்ளிவிட்டார். அப்போது கீழே விழுந்ததில் கல்லில் தலை மோதியதில் கிருஷ்ணமூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து மது போதையில் இருந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கார் ஓட்டுனராக பணிபுரியும் சிவராமன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதனால் சிவராமன் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.