டாஸ் வென்ற பின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கா? பவுலிங்கா? என  குழம்பிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  பங்கேற்றுள்ளது. இதில் ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்துள்ளார். அதன்படி நியூசிலாந்து அணி களமிறங்கி பேட்டிங் ஆடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்கள் மாறாமல் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார்கள்.

முன்னதாக டாஸ் போடும்போது ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்வதா? அல்லது பந்து வீச்சை தேர்வு செய்வதா  என குழம்பினார். கிட்டத்தட்ட ரோஹித் 15 நொடி தலையில் கைவைத்து யோசித்துப் பின் ஒரு வழியாக பந்து வீசுவதாக முடிவு செய்தார். ரோகித் சர்மா யோசித்துக் கொண்டிருந்தபோது பின்னால் பயிற்சி செய்து கொண்டிருந்த சக வீரர்களும் அதனை பார்த்து சிரித்தனர். ரோஹித் சர்மா யோசித்து குழம்பிய வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் சிரித்து நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்..

 

https://twitter.com/Bishalroy_01/status/1616701499060682753