தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூற அதில் உடன்பாடு ஏற்படா எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூட்டத்திலிருந்து வெளியேறினார். இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது, என்னுடைய பதிலை எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருக்க வேண்டும். அவர் ஒரு குற்றச்சாட்டை சொன்ன நிலையில் ஓடி ஒளியாமல் அதற்கான பதிலை கேட்டறிந்து இருக்க வேண்டும். அதுதான் நியாயம். ஆனால் நான் ஓடி ஒளிய மாட்டேன். பதில் சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண் காவலர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன் பிறகு குற்றவாளிகளான பிரவீன்குமார் மற்றும் ஏகாம்பரம் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

புகார் கொடுத்த உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இதுபோன்று எந்த வழக்கிலாவது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா. எஸ்.பி அந்தஸ்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரிகளை இது போன்ற புகாரில் அலைக்கழித்த ஆட்சி தான் அதிமுக. ஆனால் இந்த ஆட்சியை பொருத்தவரை பெண்களுக்கு எதிராகவும் பெண் காவலர்களுக்கு எதிராகவும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.