மதுரை மாவட்டம் பழங்காந்தம் என்னும் பகுதியில் பிள்ளையார் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவ நாளன்று பிள்ளையார் கணேசன் தனது மனைவி குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படவில்லை. இதனால் மன உளச்சலுக்கு ஆளான அவர் அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தை பார்த்த அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் பிரபல ரவுடி என்பதும் அவர் மீது 20க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.