“ஹைதராபாத் எங்களை ஆதரித்த விதம், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்”என்று  நெதர்லாந்திற்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பாபர் அசாம் தெரிவித்துள்ளார்..

நேற்று அக்டோபர் 6, வெள்ளிக்கிழமை அன்று நெதர்லாந்திற்கு எதிரான 2023 உலகக் கோப்பை போட்டியின் போது ஹைதராபாத் மக்கள் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் மீது தங்கள் அன்பைப் பொழிந்தனர். போட்டியில் பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 49 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்தில் நன்றாகப் போராடிய போதிலும் இறுதியில் பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக சரணடைந்தது. நெதர்லாந்து 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பேட்டிங்கில் பாபர் அசாம் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் சவுத் ஷகீல் தனது முதல் உலகக் கோப்பையில் ஆக்ரோஷமாக அரைசதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இப்போட்டியின் 2வது இன்னிங்ஸின் போது, ​​​​பாகிஸ்தான் 36 வது ஓவரில் பீல்டிங் செய்யும் போது, ​​​​ரசிகர்கள் பாபர், பாபர் என உரத்த குரலில் கோஷமிட்டனர். அவர்களுக்கு கையால் சைகை மூலம் அன்பை வெளிப்படுத்தினார் பாபர் அசாம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் முடிவில், ஹைதராபாத் ரசிகர்கள் தனது அணிக்கு அளித்த ஆதரவிற்கு பாபர் அசாம் நன்றி தெரிவித்தார். அவர்கள் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து நகரத்தில் தங்களுக்கு ஆதரவு அளித்ததற்கும், சிறந்த விருந்தோம்பலுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

போட்டியின் வெற்றிக்கு பிறகு பாபர் அசாம் பேசியதாவது, “ஹைதராபாத் எங்களை ஆதரித்த விதம், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இங்குள்ள விருந்தோம்பலில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.. மிகவும் திருப்தி, பந்து வீச்சாளர்களுக்கு எனது கிரெடிட் (பாராட்டுக்கள்). நாங்கள் நன்றாக தொடங்கினோம், நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்கள் மீது அழுத்தம் கொடுத்தோம். நாங்கள் ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தோம், ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் தொடங்கிய விதம் எங்களுக்கு நிறைய வேகத்தை அளித்தது.

இந்த பார்ட்னர்ஷிப் நெதர்லாந்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. சவுத் தனது இன்னிங்ஸைக் கட்டமைத்து சிறப்பாக விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் சவுத் நிறைய முன்னேறியுள்ளார். “முதல் 10 ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தினோம், ஹரிஸ் நல்ல லெங்த்தில் பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தார்.” என்று தெரிவித்தார். தனது முதல் உலக கோப்பை போட்டியை இந்திய மண்ணில் வெற்றிகரமாக தொடங்கியுள்ளதால் பாகிஸ்தான் அணி மகிழ்ச்சியில் உள்ளது..

https://twitter.com/SharyOfficial/status/1710320488625373351