சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ஆம் தேதி குடமுழக்கு திருவிழா நடைபெற இருப்பதால், தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு தமிழில் மந்திரங்கள் ஓத வேண்டும். கடந்த சில வருடங்களாகவே சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓதப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் தான் மந்திரம் ஓத வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அந்த உத்தரவு பழனி முருகன் கோவிலுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் முருகன் தமிழ் கடவுள் ஆவார். எனவே தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த ஒரு தனிநபரும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டியது இல்லை என்று கூறப்பட்டது. அதோட தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. இந்த கருத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தமிழில் மந்திரம் ஓதுவது தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.