கேரள மலப்புரத்தில் சர்க்கரை குறைவாக டீ கொடுத்ததற்காக ஹோட்டல் உரிமையாளரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அரேங்கேறியுள்ளது. இச்சம்பவம் தனுர் நகரிலுள்ள டி.ஏ ஹோட்டல் வைத்து இன்று நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது “டி.ஏ. ஹோட்டலில் அதிகாலை 5:30 மணியளவில் தனுரை சேர்ந்த சுபைர் என்பவர் டீ அருந்த சென்று உள்ளார். அங்கு டீயில் சர்க்கரை குறைவாக இருந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கும் ஹோட்டல் உரிமையாளர் மனாஃப் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதால் அருகிலிருந்தவர்கள் சமாதானம் செய்து சுபைரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்திற்கு பின் மீண்டுமாக  ஹோட்டலுக்கு வந்த சுபைர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உரிமையாளர் மனாஃப்பை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அதன்பின் மனாஃப் படுகாயங்களுடன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் சுபைரை கைது செய்தனர்.