கேப்டன் தோனி என்னை நிதானமாக பந்துவீசச் சொன்னார்,” என்று ஆர்சிபிக்கு எதிரான தனது கடைசி ஓவர் குறித்து சிஎஸ்கே பந்துவீச்சாளர் பத்திரனா கூறினார்.
கடந்த 17ஆம் தேதி திங்கட்கிழமை சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. டேவன் கான்வே 45 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 83 ரன்களும், ஷிவம் துபே 27 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்தனர்.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில்,சிஎஸ்கே ரசிகர்களால் குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரானா 11 ரன்கள் விட்டுக்கொடுத்து இக்கட்டான சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
இந்நிலையில் அவர் தனது கடைசி ஓவர் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மதீஷா பத்திரனா கூறுகையில், “இது ஒரு நல்ல ஓட்டம். ஆனால் நாங்கள் அதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்தில் தோனி எங்களிடம் கூறினார். ஆனால் முதல் இரண்டு ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்ததால் கடைசி ஓவரை வீச சற்று பதட்டமாக இருந்தது.
பின்னர் தோனி வந்து என்னிடம் கவலைப்பட வேண்டாம், அமைதியாக இருங்கள் மற்றும் உங்கள் பலத்தை நம்புங்கள் எனது பந்துவீச்சு திறனை நம்ப வேண்டும் என்றும், பயப்படாதே என்றார். கிரிக்கெட்டில் நல்லது நடக்கும், கெட்டது நடக்கும் என்று கூறினார். அதன் முடிவில் நான் நன்றாக பந்து வீசினேன். அது எனக்கு உதவியது. இந்த வெற்றி எங்கள் அணிக்கு மன உறுதியை அளித்துள்ளது,” என்றார்.