இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் ஹாரன்சர்ச் பகுதியில் நியூ சிட்டி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள டிஸ்கோ எக்ஸ்பிரஸ் கடைக்கு வெளியே 18 வயதுடைய மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த நான்கு நாட்களுக்குள் அப்பகுதியில் நடந்த இரண்டாவது கத்தி குத்து சம்பவம் என்பதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.