ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய மூவருக்கு இடையே நடுரோட்டில் நடந்த பயங்கர அடிதடி சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தால் குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனை கையும் களவுமாக பிடிக்கத் திட்டம் தீட்டி ரகசியமாகப் பின்தொடர்ந்துள்ளார். ஒருநாள் காந்தி நகர் ரயில் நிலையம் எதிரே கணவன் தனது காதலியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, குறுக்கே மறித்து ஹெல்மெட்டைக் கழற்றச் சொல்லி, நடுரோட்டிலேயே இருவரையும் சரமாரியாக வெளுக்கத் தொடங்கினார்.

 

மனைவி அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கத் தொடங்கியதும், கணவன் காதலியைப் பாதுகாக்கத் தனது பைக்கைக் கீழே தள்ளிவிட்டு இடையில் புகுந்துள்ளார். இதனால் இன்னும் ஆத்திரமடைந்த மனைவி, கணவனின் காலரைப் பிடித்து இழுத்து முகத்தில் குத்துகளையும், உதைகளையும் பறக்கவிட்டார். இந்த அதிர்ச்சிச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்குத் திரண்டு, தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பஜாஜ் நகர் காவல் நிலைய அதிகாரி ராம்தன் கூறுகையில், இதுவரை எந்தவொரு தரப்பும் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றும், எனினும் வைரல் வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.