பா.ஜ.க.வை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா கடந்த மாதம் இண்டிகோ விமானத்தில் பயணித்த போது தவறுதலாக அவசர கால கதவை திறந்து விட்டதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். விமானத்தின் அவசர கால கதவை திறந்தது குறித்து தேஜஸ்வி சூர்யா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதராதித்திய சிந்தியா என்று இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை -திருச்சி இடையே கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணிகளை ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பயணி தவறுதலாக அவசரகால கதவை திறந்து விட்டதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டிருந்தார் எனவும் விமான நிறுவனம் சார்பாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் அவசரகால கதவை திறந்தது தேஜஸ்வி சூர்யா என்பதை உறுதி செய்துள்ளார்.

மேலும் இது வேண்டுமென்றே செய்யவில்லை. உண்மை நிலவரத்தை பார்க்க வேண்டும். தவறுதலாக விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்பட்டது. அதன் பின் அனைத்து நடைமுறைகளும் சரிபார்க்கப்பட்ட பின் விமானம் புறப்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து பொறியாளர்கள் வந்து விமானத்தை பரிசோதித்த பின்பு விமானம் புறப்பட்டு சென்றதாகவும் இதன் காரணமாக பயணிகளுக்கு சுமார் 2 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.