சீனாவில் கடந்த மாதம் கொரானா கட்டுப்பாடுகளை அரசு நீக்கியதன் காரணமாக அங்கு தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது பாரபட்சமான நடவடிக்கை என சீனா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் சீனா நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், சீன பயணிகளுக்கு கட்டுப்பாட்டை விதித்ததற்கு பதிலடியாக தென்கொரிய மக்களுக்கு சுற்றுலா மற்றும் வணிக விசா வழங்குவதை நிறுத்துவதாக தெரிவித்தது.
மேலும் சீன பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என சீனா தெரிவித்தது. இந்நிலையில் தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பான் மக்களுக்கு சீனா விசா தடையை விதித்துள்ளது. இது குறித்து ஜப்பானில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல் ஜப்பானில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் சீனாவுக்கு செல்லும் ஜப்பானிய குடிமக்களுக்கான விசா வழங்குவதை நிறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு இந்த தடையை சீனா விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.