கே எல் ராகுலுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாததால் அடுத்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது..
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை நேற்று முன்தினம் பிசிசிஐ அறிவித்தபோது, துணை கேப்டன் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. தற்போதைய அணியில் எந்த மாற்றமும் செய்ய பிசிசிஐ தயாராக இல்லை என்றாலும், கே.எல். ராகுலின் பெயருடன் இருந்த துணை கேப்டன் பதவி ‘எடுக்கப்பட்டது’. ஆனால் வேறு யாருக்கும்அந்த பதவி வழங்கப்படவில்லை. இதனால் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் ராகுல் விளையாட மாட்டார் என்ற வதந்தி பரவியது. முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோர், பயங்கர ஃபார்மில் இருக்கும் ஷுப்மான் கில்லுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் சொதப்பும் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது என புள்ளிவிவரத்துடன் விமர்சித்திருந்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ராகுலால் பிரகாசிக்க முடியவில்லை. இந்திய ஸ்கோர் 6 ரன்களாக இருந்தபோது ராகுல் ஆட்டமிழந்தார். 2வது இன்னிங்ஸில் ராகுல் 3 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியானிடம் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கேட்ச் கொடுத்து ராகுல் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ராகுல் 41 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சிலும் ராகுலை நாதன் லயன் ஆட்டமிழக்கச் செய்தார்.
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கே.எல். ராகுல் ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராகுல் முதல் இன்னிங்சில் 71 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இந்த 2 டெஸ்ட் தொடரிலும் ராகுல் தொடர்ந்து சொதப்பியதால் அடுத்த 3வது டெஸ்ட் போட்டியில் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். தற்போது துணைகேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளதால், அடுத்த போட்டியில் ராகுல் கழட்டிவிடப்படுவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கேஎல் ராகுல் மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்த டெஸ்ட் தொடரில் மட்டுமல்ல. கடந்த 2022 டி20 உலக கோப்பை தொடரிலிருந்து, அவரது பார்ம் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சொதப்பிய போதிலும் வாய்ப்பு வழங்கி வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரும், நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
India’s squad for 3rd & 4th Test vs Australia
Rohit Sharma (C), KL Rahul, S Gill, Cheteshwar Pujara, Virat Kohli, KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, Axar Patel, Kuldeep Yadav, R Jadeja, Mohd Shami, Mohd Siraj, Shreyas Iyer, Suryakumar Yadav, Umesh Yadav, Jaydev Unadkat
— BCCI (@BCCI) February 19, 2023