புதுக்கோட்டை மாவட்டத்தில் மரண வீடொன்றில் எதிர்பாராத விதமாக அரங்கேறியுள்ள மற்றுமொரு விபத்து பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இம்மாநிலத்தின் கீரனூர் அருகேயுள்ள வடக்கு துவரவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் அண்மையில் நடந்த சாலை விபத்தொன்றில் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தும் பொருட்டு, தேவராஜின் உடல் அவரது சொந்த இல்லத்தில் ஒரு குளிர்சாதனப் பெட்டியில்  வைக்கப்பட்டிருந்தது.

துக்க நிகழ்வு என்பதால் ஏராளமான அஞ்சலி செலுத்துபவர்கள் அங்கே திரண்டிருந்த சமயத்தில், அந்தப் பிரீசர் பாக்ஸில் எதிர்பாராத விதமாகத் திடீர் மின்கசிவு  ஏற்பட்டுள்ளது.

அப்போது அதன் அருகே நின்று கொண்டிருந்த மற்றும் பெட்டியைத் தொட்டுக் கொண்டிருந்த சுமார் 16 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.

மின்தாக்குதலுக்கு ஆளாகி அலறியடித்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாகக் கீரனூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், துக்க வீட்டில் மேலும் ஒரு விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.