பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். திருவண்ணாமலை மாநகராட்சி சுற்றி இருக்கும் ஏரி குளங்கள் நிரம்பி உபரி நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மலையடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோவில் பின்புறம் குடியிருப்புகள் உள்ளது. மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததால் இரண்டு வீடுகள் முற்றிலும் சேதமானது.

ஒரு வீட்டில் வசித்த தம்பதி, அவரது மகன், மகள், உறவினரின் மூன்று வயது சிறுமிகள் என ஏழு பேர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வ.உ.சி நகர் பகுதியில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது மூன்றாவதாக திருவண்ணாமலை தீப மலையின் தென்கிழக்கு பகுதியில் 2000 அடிக்கு மேல் மலையிலிருந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.