திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே புஞ்சையூர், முன்னியூர், பூசலாங்குடி, கீரக்களூர், ஆண்டி கோட்டகம், புழுதிக்குடி, சிதம்பர கோட்டகம், சோளிங்கநல்லூர் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் மக்கள் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக போதுமான போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். புழுதிக்குடி, பூசலங்குடி, கிரகளூர், விளக்குடி வழியாக கோட்டூர் வரை பாரத பிரதமர் சாலை மேம்பாடு திட்டத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் திருத்துறைப்பூண்டியிலிருந்து இந்த வழித்தடங்களில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து புஞ்சையூரில் உள்ள ஒருவர் கூறியதாவது, புஞ்சையூர்,முன்னியூர் போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் 6 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மிகவும் சிரமமாக இருக்கிறது. போதிய பேருந்து வசதி இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்க்க முடியவில்லை. அதேபோல் வேலைக்கு செல்லும் பெண்கள் சரியான நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து திருத்துறைப்பூண்டியிலிருந்து பூசலாங்குடி, புழுதிக்குடி, கிரகளூர் போன்ற வழியாக கோட்டூருக்கு பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.