காலையில் எழுந்ததும் ஒரு கப் சூடான காபி குடித்தால்தான் பலருக்கு அன்றைய நாளே புத்துணர்ச்சியுடன் தொடங்கும். ஆனால் “காபி ஆரோக்கியத்திற்கு கெடுதல்” என்று சொல்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 1 லட்சத்து 30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. தினமும் அளவோடு காபி குடிப்பது மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக, தினமும் 2 முதல் 3 கப் காபி குடிப்பவர்களுக்கு வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதி நோயான ‘டிமென்ஷியா’ வரும் அபாயம் 18 சதவீதம் வரை குறைவதாகத் தெரியவந்துள்ளது. டீ குடிப்பவர்களாக இருந்தால், ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் டீ குடித்தாலே மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் இந்த நன்மைகள் அனைத்தும் சாதாரண காபிக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கஃபைன் இல்லாத ‘டிகாஃப்’ காபி குடித்தால் எந்தப் பலனும் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, மதியம் 2 மணிக்கு முன்பாகக் காபி குடிப்பது மூளைக்கு நல்லது. இது பார்கின்சன்ஸ் மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பியல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது. அதே நேரத்தில், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால், ஒரு நாளைக்கு 3 கப்புக்கு மேல் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாகக் குடிக்கும் போது தூக்கமின்மை மற்றும் இதயப் படபடப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் காபியை விட டீ குடிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். க்ரீன் டீ குடிப்பதும் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் என்று ஜப்பான் மற்றும் சீன நாட்டின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வயதானவர்கள் தினமும் 1 முதல் 3 கப் வரை டீ அல்லது காபி தாராளமாகக் குடிக்கலாம். இருப்பினும், உயர் ரத்த அழுத்தம் (BP), அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு அளவாகக் குடிப்பதே பாதுகாப்பானது.
எனவே, இனிமேல் தினசரி காபி அல்லது டீ குடிக்கும் போது தேவையற்ற குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. அளவோடு எடுத்துக்கொள்ளும் காபியும் டீயும் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஒரு சிறந்த மருந்தாகவே செயல்படுகிறது. அளவோடு குடித்து மூளையை எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
