லக்னோவின் காவல் எல்லைக்குட்பட்ட புத்தேஷ்வர் பகுதிக்கு அருகே இயங்கி வந்த சட்டவிரோத பால் பண்ணைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையினரும் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வாக்குவாதம் முற்றிப்போய், திடீரெனப் பொதுமக்கள் திரண்டு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதலின் போது நிலைமை கைமீறிச் சென்று, அங்குப் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் வினய் படேல் என்பவரைக் கீழே தள்ளி, அவரின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

மேலும், இரும்புக் சங்கிலியால் தலைப்பகுதியில் பலமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் ஆறு தையல்கள் போடும் அளவிற்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இக்கலவரத்தின் போது பல அதிகாரிகளும் காவல்துறையினரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிக்கே இந்த நிலைமை ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாகப் மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசுக் அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், கலவரத்தை ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு பெண்கள் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

“>