தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை திட்டம் கடந்த வருடம் செயல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் முதல்வர் திறனறித் தேர்வு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

முதல்வர் திறனறிவு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஆயிரம் பேருக்கு அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தில் தேர்வாகும் ஆயிரம் மாணவர்களுக்கு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும். அதே மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு வரும்போது வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.