சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் தள்ளுபடி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது, தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கலைஞர் தான் விதை விதைத்தார். மகளிர் சுய உதவிக் குழு இன்றைக்கு மிகப்பெரிய அளவில் வளர்வதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். முதல்வர் ஸ்டாலின் பெண்களின் பொருளாதாரம் உயர வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி வரை கடன் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்துள்ளார்.

ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட கடந்த வருடம் 21,000 கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ‌கடன் உதவி வழங்கப்பட்டது. கடந்த 10 வருடங்களாக விவசாய கடன் ரூ. 6000 கோடி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு ரூ. 10,000 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சில தினங்களில் விவசாயிகளுக்கான கடன் தொகை தமிழகத்தில் 12000 கோடியை எட்ட உள்ளது என்று கூறினார்.