தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து அரங்கேறிய திகிலூட்டும் தொடர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தத் கொடூரச் செயல்களில் தாயும் அவரது மைனர் மகனும் ஈடுபட்டுவந்தது காவல்துறையினரைக் கூட அதிர வைத்துள்ளது.

அதாவது ஒரு விவசாய நிலத்தில், பூபள்ளியைச் சேர்ந்த விஜயா என்பவரின் பாதி எரிந்த சடலத்தை கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காவல்துறையினர் மீட்டு விசாரணையைத் தொடங்கினர்.  விசாரணையின் போது, சம்பவம் நடந்த அன்று மாலை சக்கலி ரஜிதா (38) என்பவரது மளிகைக் கடைக்குள் விஜயா சென்றுள்ள சிசிடிவி காட்சிகள் சிக்கின. மேலும், விஜயாவின் உடலைப் பைக்கில் ஏற்றிச் செல்லும் காட்சிகளும் காவல்துறையினருக்குக் கிடைத்தன. இதன் அடிப்படையில் ரஜிதாவையும் அவரது மைனர் மகனையும் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் செய்த கொடூரக் குற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன.

மளிகைக் கடை நடத்தி வந்த ரஜிதாவிற்குக் கடனுதவி அல்லது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலை மற்றும் குடும்பப் பின்னணியைக் கவனிப்பது வழக்கம். குறிப்பாக, கணவனைப் பிரிந்தவர்கள், தனியாக வசிப்பவர்கள் அல்லது குடும்பப் பிரச்சனை உள்ள பெண்களையே இவர்கள் தங்களின் இலக்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களைக் கொன்றால் ஆரம்பத்தில் சந்தேகம் மற்றவர்கள் மீதும் கணவன் மீதும் திரும்பும் எனத் துல்லியமாகக் கணக்கிட்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி, தனியாக வாழ்ந்து வந்த விஜயா மளிகைக் கடைக்கு வந்தபோது, தாயும் மகனும் சேர்ந்து அவரை மூச்சுத் திணறச் செய்து கொன்றுள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, சடலத்தைப் பைக்கில் ஏற்றிச் சென்று  பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, இதற்கு முன்பும் இவர்கள் இதேபோன்று குற்றங்களில் ஈடுபட்டது அம்பலமானது. கடந்த மே 28 அன்று,  குந்தா ரேகா என்ற பெண்ணைக் கொன்று, அச்சமய்யப்பள்ளி வனப்பகுதிக்குக் கொண்டு சென்று எரித்துள்ளனர். மேலும், கடந்த 2025 ஜூன் மாதம், காலை நடைப்பயிற்சி சென்ற அன்னபூர்ணா என்பவரைத் தாக்கி, அவரது தங்கத் தாலியைப் பறித்துச் சென்றுள்ளனர். இவ்வளவுடன் நிற்காமல், ரஜிதாவின் சொந்தக் கணவர் உட்பட மேலும் 4 பேரைக் கொலை செய்ய இவர்கள் கோரமான திட்டங்களைத் தீட்டியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், குற்றவாளிகளிடமிருந்து திருடப்பட்ட தங்க, வெள்ளி நகைகள், 1.03 லட்சம் ரூபாய் ரொக்கம், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் சடலத்தைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

தற்போது தாயான ரஜிதா நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மைனர் மகன் சட்ட விதிகளின்படி அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தனியாக வாழ்ந்த பெண்களைக் குறிவைத்துத் தாயும் மகனும் செய்த இந்தத் தொடர் கொலைச் சம்பவங்கள் தெலங்கானா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.