மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கள்ளகாதல் தொடர்பான பிரச்சினையால் 6 வயது சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேடகம் காலனியைச் சேர்ந்த அய்யனார் (45) என்பவரின் மனைவி உமா, அப்பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருடன் பழக்கமாக இருந்த நிலையில் இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அய்யனார், சில நாட்களுக்கு முன்பு இரவில் விவேக் வீட்டுக்கு சென்று, அவரின் தந்தை முத்துச்சாமி (50), அவரது மனைவி பொன்மணி (42), மற்றும் பேரன் மாதேஷ் பாண்டியன் (6) ஆகியோரைக் கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த கொடூர சம்பவத்தில் மூவரும் படுகாயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுவன் மாதேஷ் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அய்யனாரின் தாக்குதலுக்கு மொத்த கிராமமே கண்டனமும் வேதனையும் தெரிவித்து வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக அய்யனார் உட்பட 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.