மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊர் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தினரே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் இந்த ஆண்டு அவனியாபுரம் கிராம கமிட்டியே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சிலர் வழக்கம் போல மாவட்ட நிர்வாகம் தான் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. நேற்று மீண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிலர் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென கூட்டத்திலிருந்து வெளியேறி கலெக்டர் மற்றும் அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
மேலும் மூன்று பேர் மாவட்ட ஆட்சியரின் கார் நிற்கும் பகுதிக்கு சென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்ததும் போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.