இந்தியாவில் வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதை பயன்படுத்தி எல்லை ஊடுருவல் முயற்சி, ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் கோரிக்கையை ஏற்று ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அனுராதா குப்தா வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்திற்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் யாரும் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ வெளியே செல்லக்கூடாது. ஒருவேளை அவசர தேவைக்காக பொதுமக்கள் யாரேனும் வெளியே வந்தால் அவர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்வார்கள். அவர்களிடம் பொதுமக்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.