கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இடைத்தேர்தல்:
அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்தத் தொகுதியின் வேட்பு மனு ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 7ஆம் தேதி நிறைவு பெற்றது.
77 வேட்பாளர்கள்:
திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அதிமுகவின் கே.எஸ் தென்னரசு அறிவிக்கப்பட்டார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் வேட்பாளராக ஆனந்தும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேகனா நவநீதன் போட்டியிட்டார். சுயேச்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
238 வாக்குசாவடி:
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
மோதல்:
இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஈரோடு பெரியார் நகரில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வாக்குச்சாவடி அருகே நின்று வாக்கு சேகரிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். இதனால், பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.