அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் வாழும் ஒருவகை காட்டு கெளுத்தி மீன்கள் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய தகவல் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் இதுவரை எங்குமில்லாத வகையில், முதன்முறையாகக் கேன்சர் நோயைப் பரப்பும் விசித்திரமான கெளுத்தி மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகை மீன்களில், ஒரு மீனிடம் இருக்கும் புற்றுநோய் செல்கள் நேரடியாக மற்றொரு மீனுக்கும் எளிதில் பரவும் தன்மை கொண்டவை என்பது ஆய்வுகள் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பொதுவாகப் புற்றுநோய் செல்கள் ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு நேரடியாகப் பரவுவது மிகவும் அரிதான நிகழ்வாகும். ஆனால், இந்த நீரரவுக் கெளுத்தி மீன்களில் இந்த விசித்திரமான செயல் நடப்பது விஞ்ஞானிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏரிகளில் வாழும் இந்த மீன்களுக்கு இடையே கேன்சர் நோய் தொற்றுவது எப்படி சாத்தியமாகிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமான அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இயற்கையில் இதுபோன்று விலங்குகளுக்கு இடையே புற்றுநோய் பரவுவது குறித்த பல  உண்மைகளை இந்த ஆய்வு வெளிக்கொண்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த வகையான மீன்களை மனிதர்கள் உணவாக உட்கொண்டால் அவர்களுக்கும் கேன்சர் நோய் பரவுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ள ஆய்வாளர்கள், இந்த மீன்களைச் சாப்பிடுவதன் மூலம் மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவுவதற்கு இதுவரை எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் மீன் பிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாலும், இந்த அறிவியல் கண்டுபிடிப்பு மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் மிக முக்கிய விவாதமாக மாறியுள்ளது.