சப்பாத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு சிறந்த உணவாகும். பல நேரங்களில் வீடுகளில் சப்பாத்தி சுட்டு முடித்த பிறகு சில சப்பாத்திகள் மீந்துபோவது வழக்கம். அப்படி மீந்த சப்பாத்திகளைத் தூக்கி எறியாமல், கடைகளில் வாங்குவது போல மிகவும் சுவையான ‘முட்டை சப்பாத்தி கொத்து’ செய்து அசத்தலாம்.
முதலில் மீந்துபோன சப்பாத்திகளை நன்றாகச் சுருட்டி (Roll செய்து) கத்தியால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் ஒரு சிறிய தக்காளியை நறுக்கிச் சேர்த்து நன்றாக மசிய வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாகச் சப்பாத்தியின் அளவுக்கு ஏற்ப மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்க வேண்டும். மசாலா தயார் ஆனதும் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி வெக வைக்க வேண்டும்.
முட்டை நன்றாக வெந்து மசாலா பதத்திற்கு வந்தவுடன், ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள சப்பாத்தித் துண்டுகளை அதில் சேர்க்க வேண்டும். மசாலாவும் சப்பாத்தியும் நன்றாக ஒன்றுசேருமாறு ஓரிரு நிமிடங்கள் கிளறி, மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால் சுவையான சூடான சப்பாத்தி முட்டை கொத்து தயார். முட்டை சாப்பிடாதவர்கள் இதிலேயே முட்டைக்கு பதிலாகக் காய்கறிகளையும் சேர்த்துச் செய்யலாம்.
